நடிகர் உபேந்திரா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

தலித் சமூகம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் உபேந்திரா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-14 18:45 GMT

பெங்களூரு:

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா. இவர் தமிழில் விஷால் நடித்த 'சத்யம்' படத்தில் நடித்துள்ளார். இவர், உத்தம பிரஜாகிய கட்சியின் நிறுவனராகவும் உள்ளார். இந்த நிலையில் கட்சி தொடங்கி 4 ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி உபேந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தலித் சமூகத்தை இழிவுப்படுத்தியும், அவதூறாகவும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மாநிலத்தின் பல்வேறு தலித் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக பெங்களூரு சி.கே.அச்சுகட்டு போலீசில் நடிகர் உபேந்திரா மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் அவர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் உபேந்திரா, தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கினார். மேலும் வீடியோ வெளியிட்டு மன்னிப்பும் கோரினார்.

இந்த நிலையில் தலித் சமூகம் குறித்து அவதூறாக பேசியது குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸ் தரப்பில் உபேந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அவரை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இதுகுறித்து அறிந்த நடிகர் உபேந்திரா, தனது செல்போன் எண்ணை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு தலைமறைவானார்.

இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் உபேந்திரா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது நடிகர் உபேந்திராவுக்கு ஆதரவாக வக்கீல் உதய் ஹொல்லா வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தலித் சமூகம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் உபேந்திரா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதனால் நடிகர் உபேந்திரா நிம்மதி அடைந்துள்ளார்.

தலித் சமூகம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் உபேந்திரா மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோலார் மாவட்டம் மாலூர், மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கே.எம்.தொட்டி போலீஸ் நிலையங்களில் தலித் அமைப்பினர் நடிகர் உபேந்திரா மீது புகார்கள் அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, நடிகர் உபேந்திராவுக்கு சொந்தமான கத்திரிகுப்பே மற்றும் சதாசிவாநகர் பகுதியில் உள்ள வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்