அம்பேத்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது; சட்டசபையில் மந்திரி மாதுசாமி பேச்சு

அம்பேத்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று சட்டசபையில் மந்திரி மாதுசாமி கூறியுள்ளார்.

Update: 2023-02-15 21:22 GMT

பெங்களூரு:

அம்பேத்கருக்கு அவமரியாதை

கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் அன்னதாணி, அம்பேத்கருக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக கூறி பிரச்சினை கிளப்பினார். இதற்கு சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-

பொறுத்துக்கொள்ள முடியாது

தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் நாடகத்தில் அம்பேத்கர் குறித்து ஆட்சேபனைக்குரிய படம் இருந்துள்ளது. அம்பேத்கருக்கு அவமரியாதை இழைப்பதை ஏற்க முடியாது. இதில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்பேத்கரை அவமதிப்பதை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதில் அந்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்பு இருந்தால் அவற்றின் மீதும் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு மாதுசாமி கூறினார்.

முன்னதாக பேசிய அன்னதாணி, 'ஜெயின் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் மாணவர்களின் நாடகம் அரங்கேறியுள்ளது. இது அந்த பல்கலைக்கழக டீன் மற்றும் ஆசிரியருக்கு தெரிந்தே நடந்துள்ளது. அதனால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த அமைப்புக்கு நிகர்நிலை அந்தஸ்தை நீக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்