சக்கர நாற்காலி தராமல் அவமதிப்பு; விமான நிறுவனத்திற்கு எதிராக இந்திய வீராங்கனை பரபரப்பு குற்றச்சாட்டு

3 மேலாளர்கள் என்னிடம் வந்து, சக்கர நாற்காலி கொடுப்பதற்கான கொள்கை எங்களுக்கு உள்ளது என நேற்று கூறினர்.

Update: 2024-02-03 16:09 GMT

புதுடெல்லி,

இந்தியாவை சேர்ந்த தடகள வீராங்கனை சுவர்ணா ராஜ். மாற்றுத்திறனாளியான இவர், இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

2014-ம் ஆண்டு கொரியாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 2 பதக்கங்களையும், 2013-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த பாரா டேபிள் டென்னிஸ் ஓபன் விளையாட்டு போட்டிகளில் 2 பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார்.

இந்நிலையில், புதுடெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் புறப்பட்டு வந்துள்ளார். அப்போது, அவருக்கு நேர்ந்த துயரங்களை விவரித்து இருக்கிறார். அவர்கள் மீண்டும், மீண்டும் இகழ்ச்சிக்குரிய செயலை செய்கின்றனர். நான் விமானத்தில் ஏறும்போதெல்லாம், விமான ஊழியர்களிடம் ஒரு கோரிக்கையை வைப்பேன்.

விமான வாசல் கதவு பக்கம் சக்கர நாற்காலி ஒன்றை தரும்படி நான் கேட்பேன். இதற்கு முன் ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன். ஆனால், பல முறை அதற்கு பலனில்லை. ஏன்?

என்னுடைய தனிப்பட்ட சக்கர நாற்காலி வேண்டும் என 10 முறை அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் செவிசாய்க்கவே இல்லை. ஊழியர்கள் சரி என கூறி விட்டு சென்று விட்டனர். 3 மேலாளர்கள் என்னிடம் வந்து, சக்கர நாற்காலி கொடுப்பதற்கான கொள்கை எங்களுக்கு உள்ளது என நேற்று கூறினர். ஆனால், ஏன் எனக்கு அது வழங்கப்படவில்லை? என கேட்டுள்ளார்.

என்னுடைய சக்கர நாற்காலி ரூ.3 லட்சம் மதிப்பிலானது. அது சேதமடைந்து விட்டது. இதற்கு இண்டிகோ நிறுவனம் பணம் தரவேண்டும். என்னுடைய சக்கர நாற்காலி பழைய நிலையில் திரும்ப எனக்கு வேண்டும்.

சக்கர நாற்காலிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பதற்கான விதிமுறைகள் இருக்கும்போது, ஏன் அவர்கள் அதனை மீண்டும் மீண்டும் மீறுகிறார்கள்? அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி ஏன் நடக்கின்றன என ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்