திருமண முறை என்பது கொள்கை சார்ந்தது; தனிநபர் சுதந்திரத்தில் மத்திய அரசு குறுக்கிடாது - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு
குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மத்திய அரசு குறுக்கிடாது என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.;
புதுடெல்லி,
ஒரே பாலின ஜோடிகள், தங்களது திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு அவை விசாரிக்கப்பட்டன.
அவற்றுக்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஒரே பாலின ஜோடிகள் தங்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் கோர முடியாது. அது அடிப்படை உரிமை அல்ல என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு மாற்றியது. ஏப்ரல் 18-ந்தேதி விவாதம் தொடங்குகிறது.
இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஒரே பாலின ஜோடி திருமணத்துக்கான எதிர்ப்பு குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-
"மத்திய அரசு யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலோ, தனிப்பட்ட செயல்பாடுகளிலோ குறுக்கிடாது. தனிப்பட்ட சுதந்திரம், தனிநபர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அவற்றை ஒழுங்குபடுத்தவோ, கேள்வி கேட்கவோ செய்யாது. எனவே, அதில் எந்த குழப்பமும் தேவையில்லை. மற்றபடி, திருமண முறை என்று வரும்போது, அது கொள்கை சார்ந்த விஷயம். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.