'பியூனாக' 20 வருடமாக வேலை பார்த்த பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியர் பணி: கடின உழைப்பால் சாதித்த நபர்

20 வருடமாக பியூனாக வேலை பார்த்த பல்கலைக்கழகத்திலே உதவி பேராசிரியராக ஒருவர் பணிக்கு சேர்ந்துள்ளார்.

Update: 2022-10-13 14:33 GMT

பாட்னா,

பீகாரை சேர்ந்த நபர் ஒருவர் 20 வருடமாக பியூனாக வேலை பார்த்த பல்கலைக்கழகத்திலே உதவி பேராசிரியராக பணிக்கு சேர்ந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த கமல் கிஷோர் மண்டல் (42 வயது) என்பவர் மாநிலத்தில் உள்ள தில்கா மஞ்சி பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் சிந்தனை மற்றும் சமூகப் பணித் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 20 ஆண்டுகளாக அதே பல்கலைக்கழகத்தில் பியூனாக பணியாற்றி வந்துள்ளார்.

பகல்பூரைச் சேர்ந்த கமல் கிஷோர் மண்டல் தனது 23 வயதில் (2003 ஆம் ஆண்டு) மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இரவு காவலாளியாக சேர்ந்து தனது பணியை தொடங்கியுள்ளார். அரசியல் அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டதாரியாக இருந்த அவர் பணத்தேவைக்காக இரவு காவலாளி பணியை மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து சில மாதங்களில் தில்கா மஞ்சி பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் (TMBU) அம்பேத்கர் சிந்தனை மற்றும் சமூகப் பணித் துறைக்கு பியூன் பதவியில் சேர்ந்துள்ளார். தனது மேற்படிப்பைத் தொடர்வதில் உறுதியாக இருந்த அவர் 2009 இல் அம்பேத்கர் சிந்தனை மற்றும் சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். அதை தொடர்ந்து 2017ல் பி.எச்டி முடித்தார். பின்னர் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவ்வாறாக சுமார் 20 ஆண்டுகளாக படித்துக்கொண்டே பியூனாக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் தான் கமலின் இந்த பல வருட கடின உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. பியூனாக வேலை பார்த்த தில்கா மஞ்சி பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதை அறிந்த கமல் அதற்கு விண்ணப்பத்துள்ளார். அதில் அவருக்கு உதவி பேராசிரியராக பணி கிடைத்துள்ளது. கமல் கிஷோர் மண்டலின் இந்த பயணம், இடைவிடாத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அமைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்