காஷ்மீரில் எல்லைக்குள் ஊடுருவல் முயற்சி; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ முகாம் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயன்றுள்ளனர். அவர்களை நிற்கும்படி கூறி பாதுகாப்பு படையினர் தடுத்து உள்ளனர். இதில், வந்திருந்த சிலர் திடீரென படை வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து படையினரும் அதற்கு பதிலடி கொடுத்தனர். தர்ஹால் காவல் நிலைய பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். தவிர, 2 ராணுவ வீரர்கள் காயமடைந்து உள்ளனர். இதனை ஜம்மு மண்டலத்திற்கான ஏ.டி.ஜி.பி. முகேஷ் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.