கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்ற இந்திய மருந்து துறை: பிரதமர் மோடி பெருமிதம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை இந்திய மருந்து துறை பெற்று உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.;

Update: 2023-03-06 06:30 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் பகுதியில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி, அவையின் மைய பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, முதல் பருவ கூட்டத்தொடர் வருகிற மார்ச் 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் முதன்முறையாக வலைதளம் வழியே நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுவார் என அரசு தெரிவித்தது.

இதன்படி, நடப்பு 2023-24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பின்னான, வெபினார்கள் எனப்படும் வலைதளம் வழியேயான கருத்தரங்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதுவரை, பசுமை எரிசக்தி வளர்ச்சி, இளைஞர் நலன் உள்ளிட்ட பல விசயங்களை பற்றி அவர் பேசியுள்ளார்.

இதன்படி, 12 தொடராக நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் 9-வது முறையாக இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் பேசினார்.

அவர் பேசும்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை இந்திய மருந்து துறை பெற்ற விதம் முன்னெப்போதும் இல்லாதது. இதனை நாம் முதலீடாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், டிஜிட்டல் சுகாதார ஐ.டி. திட்டத்தின் வழியே, சுகாதார நலன்கள் சரியான நேரத்தில் சென்றடைய செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

அரசின் இ-சஞ்சீவனி செயலியின் தொலைதூர மருத்துவ சேவை வழியே 10 கோடி தொலைதூர ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன என கூறினார்.

இதுதவிர, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகேயே பரிசோதனை வசதிகள் மற்றும் சிறந்த முதன்மை சுகாதார நல வசதிகளை பெற வேண்டும் என்பது அரசின் முக்கிய கவனத்திற்குரிய விசயங்களில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பரவலின்போது தனது நாட்டு மக்களுக்கு தேவையான உயிர்காக்கும் தடுப்பூசிகளை வழங்கியதுடன், உலகம் முழுவதும் உள்ள 100 நாடுகளுக்கு தடுப்பூசி மைத்ரி என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளை வழங்கி உதவியது. இதேபோன்று, 150 நாடுகளுக்கு வேண்டிய மருந்து பொருட்களையும் வழங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்