எதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பிந்து ;கோவாவுக்கு ஹனிமூன் செல்ல தயார்...!
திருமண விழாவில் நெருங்கிய தோழிகள் மற்றும் உடன் பணியாற்றும் நபர்கள் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண விழா வெறும் 40 நிமிடத்தில் முடிவடைந்தது.;
அகமதாபாத்
குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ). எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமா இன்று தன்னை தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தார். இதற்கு சோலோகேமி என்று பெயர். பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஷாமா பிந்து தனது முடிவை மாற்றினார். ‛‛நான் யாருடைய மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்த விரும்பவில்லை. இதனால் திருமண இடத்தை மாற்ற விரும்புகிறேன். இருப்பினும் சோலோகேமி திருமணத்தை நிச்சயம் செய்வேன். இந்த முடிவை யாருக்காகவும் விட்டு தர மாட்டேன்'' என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அவர் தன்னை தானே நேற்றே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் திடீரென்று ஷாமா பிந்து அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பாக நேற்றே தனது வீட்டில் வைத்து தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார். மெகந்தி, மஞ்சள் பூசும் விழா உள்பட அவரது பாரம்பரிய வழக்கபடி சடங்குகள் நடத்தப்பட்டது. இதையடுத்து ஷாமா பிந்து தனது நெற்றியில் தானே குங்குமம் வைத்து தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார்.
இந்த விழாவில் அவரதுநெருங்கிய தோழிகள் மற்றும் உடன் பணியாற்றும் நபர்கள் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண விழா வெறும் 40 நிமிடத்தில் முடிவடைந்தது.திருமணத்துக்கான மந்திரங்கள் டேப் ரெக்கார்ட் மூலம் இசைக்கப்பட்டது. கழுத்தில் மாலை அணிந்து நெற்றியில் குங்குமம் சூடி மணப்பெண்ணாக மாறி ஷாமா பிந்து தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார்.
இதுபற்றி ஷாமா பிந்து கூறுகையில், ‛‛இறுதியாக திருமணமான பெண்ணாக உணர்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. சோலோகாமி திருமணம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அறிவித்த தேதியில் விழா நடத்தினால் பிரச்சனைகள் ஏற்படலாம் என நினைத்தேன். இதனால் 3 நாட்களுக்கு முன்பே தோழிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன்'' என்றார்.
மேலும் அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛சோலோகாமி திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏராளமானவர்கள் எனது உணர்வை புரிந்து வாழ்த்துகள் தெரிவித்தனர். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக திருமணத்துக்கு பிறகு கோவாவுக்கு ஹனிமூன் செல்ல உள்ளேன் என அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.