இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு இது பொற்காலம்- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
தற்போதைய சகாப்தம் இந்திய பாதுகாப்புத் துறையின் பொற்காலம் என்று ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.;
காந்திநகர்,
குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று நடைபெற்ற 'பாதுகாப்புக்கான முதலீடு' கருத்தரங்கில் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய சகாப்தம் இந்திய பாதுகாப்புத் துறையின் பொற்காலம் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ராஜ்நாத் சிங், "2025 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பு உற்பத்தியை 12 பில்லியன் டாலரில் இருந்து 22 பில்லியன் டாலராக அதிகரிப்பதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. நியாயமற்ற வெளிநாட்டுப் போட்டியிலிருந்து நமது உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
நமது முதலீட்டாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். அது அவர்களுக்கு நல்ல வருமானத்தை மட்டுமல்ல, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் அங்கீகாரத்தையும் அளிக்கும்
நமது பாதுகாப்புத் துறை ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. போர் விமானங்கள், விமானம் தாங்கிகள், முக்கிய போர் டாங்கிகள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதன் மூலம் நமது தொழில்துறை அதன் திறன்களை வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய காலம் இந்திய பாதுகாப்புத் துறையின் பொற்காலம்," என்றார்.