8 மாதங்களுக்குப் பின் 10 ஆயிரத்தைத் தாண்டியது, கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு அசுர வேகம் எடுக்கிறது. 8 மாதங்களுக்குப்பின் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது.;
புதுடெல்லி,
நாட்டில் தற்போது கொரோனா பரவல் அசுர வேகம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் 8 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு, நேற்று அதிரடியாக 10 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 158 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு (சரியாக 230 நாட்கள்) இந்த அளவு தினசரி பாதிப்பு அதிகரித்து இருப்பது கோடிட்டுக்காட்டத்தக்கது.
இதன் மூலம் தொற்று பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 2 லட்சத்து 29 ஆயிரத்து 958 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன் தினசரி பாதிப்பு விகிதம் 4.42 சதவீதமாக பதிவானது.
நாட்டிலேயே கேரளாவில்தான் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. நேற்று அங்கு 3 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டது. டெல்லியிலும், மராட்டியத்திலும் தலா 1,100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு நேற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நாட்டில் நேற்று ஒரு நாளில் 5 ஆயிரத்து 356 பேர் மீண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 127 பேர் மீண்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் 16 பேர் பலியாகினர். நேற்று கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 4-ஐ கணக்கில் காட்டிய நிலையில் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் 9 பேரும், குஜராத்தில் 2 பேரும், டெல்லி, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாட்டில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு மொத்தம் 5 லட்சத்து 31 ஆயிரத்து 35 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
கொரோனா தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 4 ஆயிரத்து 783 அதிகரித்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 998 ஆக உயர்ந்தது.
தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கக்காரணம், ஒமைக்ரான் துணை வைரஸ் 'எக்ஸ்பிபி.1.16' தான் என நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்று அதிகரித்தாலும் ஆபத்து இருப்பதாக தகவல் இல்லை.