அடுத்த ஆண்டு இந்தியர்கள் விண்வெளியில் பறப்பார்கள் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
விண்வெளித்துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான சூழலை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.;
சென்னை,
உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
ராக்கெட் கட்டுமானம் என்பது பெரிய அளவில் லாபம் தராது. வன்பொருள் பயன்பாட்டை குறைப்பதே நமது வெற்றிக்கு காரணம். இந்தியா தான் குறைந்த செலவில் ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்துகிறது.
சந்திராயன் வெற்றி அனைவருக்குமானது. சந்திராயன் 3 திட்டம் மக்கள் இதயங்களில் உள்ளது. அடுத்த ஆண்டு இந்தியர்கள் விண்வெளியில் பறப்பார்கள். விண்வெளித்துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான சூழலை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மையம் அமைந்தால் அப்பகுதியில் விண்வெளி தொடர்பான ஆலைகள் அதிகமாகும். அடிக்கல் நாட்டப்பட்ட 2 ஆண்டுகளில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.