கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் : மத்திய அரசு தகவல்
விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் விதமாக கடந்த மாதம் மத்திய அரசு 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, கையிருப்பில் வைத்தது. அதன் தொடர்ச்சியாக வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பு அளவு 5 லட்சம் டன்
இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5 லட்சம் டன்னாக உயர்த்தும் விதமாக கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கூடுதல் கொள்முதல் இலக்கை அடைய இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவை தலா ஒரு லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட இருப்புகளை முக்கிய நுகர்வு மையங்களில் அளவீடு செய்து வினியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மானிய விலையில் வெங்காயம்
சில்லரை விலைகள் அகில இந்திய சராசரியை விட அதிகமாகவும் அல்லது முந்தைய மாதத்தை விட கணிசமாக அதிகமாகவும் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்தைகளை குறிவைத்து, இருப்பிலிருந்து வெங்காயத்தை விடுவிப்பது தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இருப்பிலிருந்து சுமார் 1,400 டன் வெங்காயம் இலக்கு சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கிடைப்பதை அதிகரிக்க தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
முக்கிய சந்தைகளில் வெளியிடுவதை தவிர, இருப்பிலிருந்து வெங்காயம் சில்லரை நுகர்வோருக்கு ஒரு கிலோ ரூ.25 என்ற மானிய விலையில் 21-ந்தேதி முதல் (அதாவது இன்று முதல்) சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் கிடைக்கும்.
விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பலன்
வெங்காயம் கொள்முதல் செய்தல், இருப்புகளை இலக்கு வைத்தல் மற்றும் ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற அரசு எடுத்துள்ள பன்முக நடவடிக்கைகள் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கும், அதே நேரத்தில் நுகர்வோருக்கு மலிவு விலையில் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.