தற்காப்புக்காகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் - ஈரானுக்கு இந்தியா ஆதரவு

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

Update: 2024-01-17 22:54 GMT

டெல்லி,

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் உள்ள ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழுவினரை குறிவைத்து ஈரான் நேற்று முன் தினம் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. மேலும், ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் தூதரையும் திரும்பப்பெற்றது. அதேபோல், ஈரானுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழு ஈரானில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சிஸ்தன் - பலுசிஸ்தான் மாகாணம் ரஸ்க் நகரில் நடத்த தாக்குதலுக்கும் இந்த பயங்கரவாத அமைப்புதான் காரணம் என்றும் ஈரான் குற்றஞ்சாட்டியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து அந்நாட்டு அரசுக்கு தகவல்கள் கொடுத்தும் அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜெய்ஷ்வால் கூறுகையில்,

இது ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான விவகாரம். இதில், இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாதத்தை சிறிதளவும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஈரான் தற்காப்புக்காக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்