வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா நீடிக்கிறது: ஐ.நா. அறிக்கை
இந்தியாவை முக்கிய மாற்று உற்பத்தித் தளமாகக் கருதும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இந்தியா பயனடைகிறது.;
புதுடெல்லி:
உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியா தொடர்ந்து உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக தொடர்கிறது என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2023ல் 6.3 சதவீதமாக இருந்த நிலையில், 2024ல் 6.2 சதவீதமாக சரியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வலுவான உள்நாட்டு தேவை மற்றும் வலுவான வளர்ச்சி இருப்பதாகவும் அறிக்கையில் கூறியிருக்கிறது.
அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
அரசாங்க உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பன்னாட்டு முதலீடுகள் சிறப்பானதாக இருந்தது. இதன் காரணமாக 2023ல் இந்தியாவில் முதலீடு வலுவாக இருந்தது. இந்தியாவை முக்கிய மாற்று உற்பத்தித் தளமாகக் கருதும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இந்தியா பயனடைகிறது.
இந்தியாவில் நுகர்வோர் விலை பணவீக்கம் 2023ல் 5.7 சதவீதமாக இருந்தது. 2024ல் அது 4.5 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய வங்கி நிர்ணயித்த 2 முதல் 6 சதவீதம் என்ற பணவீக்க இலக்கு வரம்பிற்குள் இருக்கும்.
இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.