வெளிநாடுகளில் ஐ.ஐ.டி.க்களை தொடங்க இந்தியா திட்டம்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல்

வெளிநாடுகளில் ஐ.ஐ.டி.க்களை தொடங்க இந்தியா திட்டமிட்டு இருப்பதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.

Update: 2022-10-15 22:35 GMT

மங்களூரு:

பட்டமளிப்பு விழா

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் தேசிய தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய தேசிய கல்வி கொள்கை ஒரு தத்துவ ஞானம். பண்டைய வரலாறுகளையும், நவீன காலத்தையும் ஒருங்கிணைப்பதே அதன் நோக்கம். இது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முயற்சியாக கருதுகிறேன். வருகிற 2047-ல் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்காக இப்போதிருந்தே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் அது சாத்தியமாக வேண்டும்.

வெளிநாடுகளில் ஐ.ஐ.டி.க்கள்...

மனித நேயம் மற்றும் அதன் பெருமையை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இவ்விஷயத்தில் இந்தியா 'விஷ்வ குரு' ஆக திகழும். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த தேசிய தொழில்நுட்ப கல்லூரி எரிசக்தி துறையில் முழுமை பெற்று அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட துறையாக செயல்படும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, எந்திர கல்வி, தகவல்-தரவு பகுப்பாய்வு, எலெக்ட்ரானிக்ஸ், 3-டி பிரிண்டிங், மரபணு திருத்தம் போன்றவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்த தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் கல்வித்தரம் உள்ளது. இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி.க்களின்(இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) கல்வித்தரம் ஏற்கனவே உலக அளவில் பேசப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது. இதனால் இன்னும் 2 ஆண்டுகளில் வெளிநாடுகளிலும் ஐ.ஐ.டி.க்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்