சீனாவில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்களை இந்தியா ஈர்க்க வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ்
சீனாவில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்களை இந்தியா ஈர்க்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
உலகின் தொழிற்சாலை
அவுரங்காபாத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
உலகின் தொழிற்சாலையாக சீனா உள்ளது. உலகின் 40 சதவீதம் உற்பத்தி அந்த நாட்டில் தான் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது உலகளாவிய முதலீட்டாளர்கள் சீனாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். முதலீட்டாளர்கள் தங்களுடைய அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளனர்.
சரியான தருணம்...
இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள கூடிய வல்லமை இந்திய நாட்டிற்கு மட்டுமே உள்ளது. சீனாவை விட்டு வெளியேறும் முதலீட்டாளர்களை நாம் ஈர்க்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான தருணம். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்த நேரத்தில் கூட இந்தியா 7 முதல் 8 சதவீதம் வளர்ந்துள்ளது. இதற்கு இந்தியா தன்னிறைவு பெற பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு தான் காரணம்.
மராட்டியத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, சாத்தியமான முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசாத நாள் இல்லை.
தொழில் சார்பு அணுகுமுறை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக மராட்டியத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரூ.90 ஆயிரம் முதலீடு
ஒரு அரசாங்கம் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். முந்தைய ஆட்சியில் 15 மாதங்களாக முதலீடு தொடர்பான மந்திரிசபை குழு கூட்டத்தை கூட்டவில்லை. கடந்த 6 மாதங்களில் நாங்கள் 2 கூட்டங்களை நடத்தி ரூ.90 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறோம்.
சீனாவில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சரியான சூழலை உருவாக்க அரசும், தொழில் நிறுவனங்களும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.