2 நாள் பயணமாக மணிப்பூர் செல்லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
‘இந்தியா' சார்பில் எம்.பி.க்கள் குழு 2 நாள் பயணமாக நாளை, நாளை மறுநாள் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் கடந்த மே மாதம் 3-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, அங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது.
இந்த கலவரத்தில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்.
பழங்குடியின பெண்கள்
இதனிடையே குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற சம்பவம் மற்றும் அங்கு பெண்களுக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றன.
மணிப்பூர் செல்லும் எம்.பி.க்கள்
இந்த நிலையில் மணிப்பூரின் நிலைமையை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் அந்த மாநிலத்துக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் குழு மணிப்பூர் செல்ல இருப்பதாகவும், அந்த குழுவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் எம்.பி.க்கள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-மந்திரிகள் குழு
இந்த குழுவினர் மணிப்பூர் பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகள் ஆகிய இரண்டுக்கும் சென்று பல்வேறு சமூகங்களை சந்திப்பார்கள் என்றும், சில நிவாரண முகாம்களுக்கு சென்று வருவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த முதல்-மந்திரிகளின் குழு மணிப்பூருக்கு செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாகவும், ஆனால் தளவாடச் சிக்கல்கள் காரணமாக அந்த யோசனை கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.