இந்தியாவில் 'டிஜிட்டல்' பல்கலைக்கழகத்தை வருகிற ஜூலை மாதம் தொடங்க நடவடிக்கை - பல்கலைக்கழக மானியக்குழு

இந்தியாவில், டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை வருகிற ஜூலை மாதம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-10-11 21:14 GMT

வீட்டு வாசலில் உயர்கல்வி

2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "மாணவர்களுக்கு அவர்களின் வீட்டுவாசலில் உலகத்தரம் வாய்ந்த, உலகளாவிய கல்வியை வழங்க டிஜிட்டல் பல்கலைக்கழகம் நிறுவப்படும்" என்று கூறினார். இந்த பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளை ஆன்லைனில் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.டி.கள், என்.ஐ.டி.கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் இணைக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு வங்கி கடன் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் டெல்லி பல்கலைக்கழக பிரதிநிதிகள், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

வேலைசார்ந்த படிப்புகள்

இதனைத் தொடர்ந்து, டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை வருகிற ஜூலை மாதம் (2023) தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் படிப்புகள் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் விதமாக இருக்கும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்திலேயே அதிக எண்ணிக்கையிலான திறன் மேம்பாடு சார்ந்த படிப்புகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி அளிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றாலும், அந்த படிப்புகள் வேலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது.

இது தவிர மாணவர்கள் படிப்பை உரிய காலத்துக்கு முன்பு முடிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. உதாரணமாக 4 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை அதற்கு முன்னதாகவே முடிக்கும் திறமையுடன் மாணவர்கள் இருந்தால் அதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஜெகதீஷ்குமார் கூறியுள்ளார்.

அதேபோல், 4 ஆண்டு படிப்பை 5 ஆண்டுகளில் முடிக்க விரும்பும் மாணவர்கள் 'டிஜிட்டல் விஸ்வ வித்யாலயா' மூலம் படிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்