ஜனநாயகத்தின் அன்னை இந்தியா: பிரதமர் மோடி பேச்சு
நீண்ட காலத்திற்கு முன்பே தலைவர்களை தேர்ந்தெடுப்பது என்பது, உலகின் பிற பகுதிகளை விட பழமையான இந்தியாவில் பொதுவான விசயங்களில் ஒன்றாக இருந்தது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு ஆண்டில் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு பல நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தியாவுடன் இணைந்து அமெரிக்க அதிபர் பைடன், கோஸ்டாரிக்கா, நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஜாம்பியா ஆகிய நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
இதனை முன்னிட்டு இன்று நடந்த ஜனநாயகத்திற்கான 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்தியா உண்மையில் ஜனநாயகத்தின் அன்னையாக உள்ளது.
நீண்ட காலத்திற்கு முன்பே தலைவர்களை தேர்ந்தெடுப்பது என்பது, உலகின் பிற பகுதிகளை விட பழமையான இந்தியாவில் பொதுவான விசயங்களில் ஒன்றாக இருந்தது என பேசியுள்ளார்.
நமது பழமையான மகாபாரத இதிகாசத்தில், குடிமக்களின் முதல் கடமையே தங்களது தலைவரை தேர்ந்தெடுப்பது என விவரிக்கப்பட்டு உள்ளது.
நமது புனிதத்தன்மை கொண்ட வேதங்கள், அரசியல் அதிகாரம் பற்றி பேசுகிறது. விரிவான அடிப்படையிலான, ஆலோசனை மேற்கொண்டு தீர்வு காணும் வகையிலான அமைப்புகளின் அடிப்படையில் அது நடந்து வந்தது.
பழமையான இந்தியா, பரம்பரையாக அல்லாத ஆட்சியாளர்களை கொண்ட குடியரசு மாநிலங்களை கொண்டிருந்தது என்பதற்கான பல வரலாற்று சான்றுகளும் உள்ளன என பேசியுள்ளார்.
ஜனநாயகம் என்பது ஒரு கட்டமைப்பு என்பது மட்டுமின்றி மனவுறுதி சார்ந்தது. ஒவ்வொரு மனிதரின் தேவைகளும், நோக்கங்களும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நம்பிக்கை அடிப்படையில் அமைந்தது.
அதனாலேயே, இந்தியாவில் ஒவ்வொருவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் வேண்டிய வளர்ச்சி என்று நமது வழிகாட்டு தத்துவம் அமைந்து உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.