இந்தியா-இஸ்ரேல் 'ஏர் இந்தியா' விமான சேவை தற்காலிக ரத்து

இந்தியா-இஸ்ரேல் இடையிலான ‘ஏர் இந்தியா’ விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-08-02 13:39 GMT

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது. அதை தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் இந்தியா இடையிலான விமான சேவையை 'ஏர் இந்தியா' நிறுவனம் ரத்து செய்தது. பின்னர் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 3-ந்தேதி மீண்டும் விமான சேவையை 'ஏர் இந்தியா' நிறுவனம் தொடங்கியது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் இந்தியாவின் தலைநகர் டெல்லி இடையே வாரத்திற்கு 4 விமானங்களை 'ஏர் இந்தியா' நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக இந்தியா-இஸ்ரேல் இடையிலான விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக 'ஏர் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் இந்தியா இடையிலான எங்கள் விமானங்களின் சேவை வரும் ஆகஸ்ட 8-ந்தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு மறுபயணம் அல்லது டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணங்களில் தள்ளுபடி வழங்கப்படும்" என்று பதிவிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்