கொரோனா காலத்தில் அதிக கோடீசுவரர்களை இழந்த டாப் 3 நாடுகள் பட்டியலில் இந்தியா

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக அளவிலான கோடீசுவரர்களை இழந்த டாப் 3 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்து உள்ளது.

Update: 2022-11-28 10:25 GMT

புதுடெல்லி,


கொரோனா பெருந்தொற்று பல அலைகளாக பரவி பல்வேறு நாடுகளிலும் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனால் விமானம், ரெயில் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முடக்கம், பொருளாதார மந்தநிலை, வருவாய் இழப்பு, தொழில்கள் பாதிப்பு போன்றவை ஏற்பட்டன.

பொதுமக்கள் பலரது இயல்பு வாழ்க்கையும் புரட்டி போடப்பட்டது. இந்த பெருந்தொற்றால், ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி பெரிய கோடீசுவரர்களும் கூட இழப்பை சந்தித்து உள்ளனர். பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களின் விற்பனை சரிந்தது. உற்பத்தி பொருட்கள் தேக்கம் ஏற்பட்டு லாபம் குறைந்தது.

இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக அளவிலான கோடீசுவரர்களை இழந்த நாடுகள் பற்றிய ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.

இதுபற்றி ஹென்லே அண்ட் பார்ட்னர்ஸ் என்ற சர்வதேச ஆலோசனை அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், 2022-ம் ஆண்டில் அதிக அளவிலான கோடீசுவரர்களை ரஷியா, சீனா மற்றும் இந்தியா ஆகிய டாப் 3 நாடுகள் இழந்துள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா 3-வது இடம் பிடித்து உள்ளது. இந்த அறிக்கையின்படி, ரஷியாவில் இருந்து 15 ஆயிரம் பேரும், சீனாவில் இருந்து 10 ஆயிரம் பேரும் மற்றும் இந்தியாவில் இருந்து 8 ஆயிரம் பேரும் என்ற அளவில் கோடீசுவரர்களை இழந்துள்ளன என தெரிய வந்துள்ளது.

கோடீசுவரர்கள் எனும்போது, ரூ.8 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பு கொண்ட நபர்களை கணக்கில் எடுத்து கொண்டு, ஆய்வில் குறிப்பிட்டு உள்ளனர். எனினும், புதிய கோடீசுவரர்களை நாடு உருவாக்கி வருகிறது.

நாட்டில் வாழ்க்கை தரம் உயர்ந்த பின்னர், கோடீசுவரர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இதன்படி, 2031-ம் ஆண்டுக்குள் தனிநபர் கோடீசுவரர்கள் விகிதம் 80 சதவீதம் அளவுக்கு உயர கூடும். இந்த காலகட்டத்தில் உலகின் மிக விரைவான வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவாகும் சூழலும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடனான நீண்டகால மோதல் போக்கால் சீனா பின்னடைவை சந்தித்து உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையின்படி, இங்கிலாந்து, இந்தோனேசியா, சவுதி அரேபியா, பிரேசில், மெக்சிகோ மற்றும் ஹாங்காங் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தங்களது கோடீசுவரர்களை இழந்து உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்