கிழக்கு லடாக் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியா-சீனா சம்மதம்

கிழக்கு லடாக்கில் மீதம் உள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண இந்தியா-சீனா சம்மதம் தெரிவித்துள்ளன.

Update: 2023-04-24 19:56 GMT

லடாக் மோதல்

கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இரு நாடுகளும் ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் உடன்பாடு ஏற்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் இருந்து இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டு விட்டன. இன்னும் சில பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற வேண்டி உள்ளது.

ராணுவ பேச்சுவார்த்தை

நிலுவையில் உள்ள இப்பிரச்சினை குறித்து விவாதிக்க 18-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடந்தது. சீன பகுதியில், சுசுல்-மோல்டோ எல்லையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அதில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கோட்டு பகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிப்படையான, ஆழமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொடர்பில் இருக்க முடிவு

அரசு தலைவர்கள் வழிகாட்டுதலில், இருதரப்பும் வெளிப்படையாக கருத்து பரிமாற்றம் செய்து கொண்டோம். மீதம் உள்ள பிரச்சினைகளுக்கு இருதரப்பும் ஏற்கத்தக்க தீர்வை விரைவில் எட்டுவதற்கு பாடுபட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. அதற்காக தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருப்பது என்றும், பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்