இந்தியா-சீனா எல்லை விவகாரம்; மத்திய மந்திரியின் கருத்து கோழைத்தனமானது - ராகுல் காந்தி பேச்சு
எல்லை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறிய கருத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.;
ராய்பூர்,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேசினார். அப்போது அவர், "சீனா மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு. லடாக் எல்லையில் சீனாவின் செயல்களுக்கு இந்தியா தகுந்த எதிர்வினையாற்றி வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய மந்திரி ஜெய்சங்கரின் கருத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து ராய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்தியாவை விட சீனா பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆங்கிலேயர்களை எதிர்த்து நாம் போராடிய போது நம்மிடம் மிகப்பெரிய பொருளாதாரம் இருந்ததா?
தம்மை விட பலசாலியான நபரிடம் பணிந்து போவது தான் சாவர்க்கரின் கொள்கை. சீனா நம்மை விட பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதால் அவர்களுடன் நம்மால் மோத முடியாது என்று வெளியுறவுத்துறை மந்திரி கூறுகிறார். இது தேசப்பற்று அல்ல, கோழைத்தனம்.
நமது நாட்டின் வளங்களை கொள்ளையடித்த கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நாம் சுதந்திரப் போராட்டத்தை நடத்தினோம். தற்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது. நாட்டிற்கு எதிராக எது வந்தாலும், அதை காங்கிரஸ் கட்சி எதிர்த்து நிற்கும்."
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.