இடைத்தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க. அச்சம் - அரவிந்த் கெஜ்ரிவால்
இடைத்தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க. அச்சம் அடைந்துள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.;
6 மாநிலங்களில் நடந்த 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அதில் பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வென்றன. இவ்வாறு 'இந்தியா' கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், 'இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. இடைத்தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க. அச்சம் அடைந்துள்ளது. இந்த நிலையில்தான் நாட்டின் பெயரை மாற்ற பா.ஜ.க. விரும்புகிறது' என்று கூறியுள்ளார்.