பீகாரில் ஆளும் நிதிஷ்குமார் கட்சியை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் வெற்றி
பீகாரில் ஆளும் ஜக்கிய ஜனதா தள வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.;
பாட்னா,
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பீகாரின் ரூபாலி தொகுதியில் ஜக்கிய ஜனதா கூட்டணியில் ஆளும் ஜக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் களம் காண்கிறார். இவரை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் பீமா பாரதியும், லோக் ஜன சக்தி சார்பில் ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருந்த சங்கர் சிங் தற்போது சுயேச்சையாக போட்டியிட்டனர்.
இந்நிலையில், ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 68 ஆயிரத்து 70 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜக்கிய ஜனதா வேட்பாளர் 59 ஆயிரத்து 824 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 8,246 ஆகும். இதனால் இந்த இடைத்தேர்தலில் நிதிஷ்குமார் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.