சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா: 'நாடாளுமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தாதது ஏன்?' காங்கிரஸ் கட்சி வேதனை
சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யாதது குறித்து காங்கிரஸ் கட்சி வருத்தம் வெளியிட்டுள்ளது.;
புதுடெல்லி,
சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா
நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பார்க்கிற இடமெல்லாம் மூவர்ணக்கொடிகள் பட்டொளி வீசிப்பறக்கின்றன. எல்லா இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி இல்லை
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படாததை காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்துள்ளது.
இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-
நமது நாட்டின் 25-வது, 50-வது, 60-வது சுதந்திர தின விழாக்களையொட்டி நாடாளுமன்றத்தில் வரலாற்றுச்சிறப்புமிக்க மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அப்படி எந்தவொரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யாதது வருத்தம் அளிக்கிறது. இந்த கொண்டாட்டம், எல்லாம் அறிந்தவரை மகிமைப்படுத்துகிற ஒரு நிகழ்வாக குறுகிவிட்டது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.