இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

அன்னிய நேரடி முதலீட்டின் அதிகரிப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நம் நாட்டில் நிலவும் வணிகச் சூழல் மீதான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2023-12-09 02:04 GMT

புதுடெல்லி,

2018-ம் ஆண்டில் இருந்து 2023 மார்ச் வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவுக்கு 469 வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தன. இதே காலகட்டத்தில் 559 வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டன. இதற்கான காரணங்கள் என்ன என்று மக்களவை எம்.பி.க்கள் கனிமொழி, ரஞ்சித் ரெட்டி ஆகியோர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அளித்த பதில் வருமாறு:-

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது அலுவலகங்களை நிறுவுவதற்கு முன்பு, ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் பிற துறைகளின் விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட 30 நாட்களுக்குள் நிறுவன பதிவாளரிடம் விண்ணப்பித்து பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும். அலுவலகங்களை திறப்பது மட்டுமல்ல, இந்திய துணை நிறுவனங்கள் மூலமாகவும் இந்தியாவில் வணிகம் செய்யலாம். இந்த வகையில் 2018-2019 நிதியாண்டு முதல், 2022-2023 நவம்பர் வரை 7 ஆயிரத்து 946 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய துணை நிறுவனங்களை பதிவு செய்திருக்கின்றன.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வணிகத்தை தொடர்வதற்கும், மூடுவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. எனினும் அன்னிய நேரடி முதலீட்டின் அதிகரிப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நம் நாட்டில் நிலவும் வணிகச் சூழல் மீதான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்