பெங்களூரு மாநகராட்சியில் 55 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு 15 நாட்களில் 173 பேர் பாதிப்பு

பெங்களூரு மாநகராட்சியில் 55 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. 15 நாட்களில் 173 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.;

Update: 2022-09-18 18:45 GMT

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் 55 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. 15 நாட்களில் 173 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

பெங்களூருவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக மகாதேவபுரா மற்றும் பொம்மனஹள்ளி உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை ஒரு வாரத்திற்கும் மேலாக மழைநீர் சூழ்ந்து இருந்தது. இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்திருப்பதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சியில் உள்ள 243 வார்டுகளில் 55 வார்டுகளில் தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த 55 வார்டுகளிலும் சராசரியாக 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோரமங்களா, எலகங்கா சேட்டிலைட் டவுனில் தலா 4 பேருக்கும், அட்டூரு, ஜக்ககூரு, ஆர்.டி.நகர், ஹெப்பால் வார்டுகளில் தலா 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கழிவுநீர் தேங்கி நிற்பதை தடுக்க...

அதன்படி, பெங்களூருவில் கடந்த 15 நாட்களில் மட்டும் 173 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெங்களூருவில் டெங்கு காய்ச்சலால் கடந்த 2018-ம் ஆண்டு 1,386 பேரும், 2019-ம் ஆண்டில் அதிகபட்சமாக 9,029 பேரும், 2020-ம் ஆண்டில் 2,047 பேரும், கடந்த ஆண்டு (2021) 1,643 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி வரை பெங்களூருவில் 1,419 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களில் அதிகபட்சமாக கிழக்கு மண்டலத்தில் 527 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாதேவபுரா மண்டலத்தில் 285 பேரும் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மழை காரணமாக டெங்கு பரவுவது அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க சுகாதாரத்துறை உரிய முன் எச்சரிக்கை எடுத்து வருவதாகவும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வீடுகள் முன்பாக கழிவுநீர் தேங்கி நிற்பதை தடுக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கமிஷனர் பாலசுந்தர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்