கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; அனைத்து மாவட்டங்களுக்கும் 'உஷார் நிலை' பிறப்பிப்பு
தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் மாநிலம் முழுவதும் 172 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக கூறிய சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ், இது வழக்கத்தை விட சற்று அதிகம் எனவும் தெரிவித்தார்.
திருவனந்தபுரம், எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் அதிக பாதிப்பு காணப்படுகிறது. மாநிலத்தில் சிகிச்சையில் உள்ள 1,026 பேரில் 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் தொற்று அதிகரித்து வருவதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மந்திரி வீணா ஜார்ஜ் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. மேலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.