கோடீசுவர பெண் வேட்பாளர் வீடு உள்பட கர்நாடகத்தில் 40 இடங்களில் வருமானவரி சோதனை
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கோடீசுவர பெண் வேட்பாளர் வீடு உள்பட மாநிலத்தில் 40 இடங்களில் வருமானவரி சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள், பட்டு சேலைகள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு:
அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சட்டவிரோத பண பரிமாற்றம், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் வங்கி கணக்குகளில் நடக்கும் பண பரிமாற்றத்தையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர போலீஸ் சோதனையின் போது ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் சிக்கினால், சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மங்களூரு, மைசூருவில் உள்ள காங்கிரஸ் பிரமுகரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சுயேச்சை பெண் வேட்பாளர்
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பெங்களூரு ஐகிரவுண்டு பகுதியில் உள்ள கே.ஜி.எப். பாபுவின் மனைவியான சுயேச்சை வேட்பாளர் சஜியா தரணும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.ஜி.எப். பாபுவுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது. பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அவர் சீட் கேட்டு இருந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்கவில்லை. இதையடுத்து, தனது மனைவி சஜியா தரணுமை சுயேச்சை வேட்பாளராக நிறுத்த கே.ஜி.எப். பாபு முடிவு செய்தார். மேலும் சஜியா தரணும் வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து நேற்று மாலை வரை அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 3 கார்களில் வந்த அதிகாரிகள், கே.ஜி.எப்.பாபுவின் வீடு, அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து முக்கிய சொத்து பத்திரங்கள், ஆவணங்கள், 5 ஆயிரம் பட்டு புடவைகள், காசோலைகள் சிக்கி இருந்தது. காசோலைகளில் சிக்பேட்டை தொகுதி என்று எழுதப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. அவற்றை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
போலீஸ் தடியடி
கே.ஜி.எப். பாபுவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பற்றி அறிந்ததும், அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் வீட்டு முன்பாக குவிந்து நின்று சட்டசபை தேர்தலில் கே.ஜி.எப்.பாபுவின் மனைவி வெற்றிபெற்று விடுவார் என்பதாலும், அவரது கை ஓங்கிவிடும் என்பதாலும் இந்த சோதனை நடப்பதாக குற்றச்சாட்டு கூறினார்கள். மேலும் கோஷங்களும் எழுப்பினார்கள்.
அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் கூறியும், கேட்கவில்லை. இதையடுத்து, கே.ஜி.எப். பாபுவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஷோரூமில் சோதனை
இதுபோல், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியின் துணை தலைவராக இருந்து வரும் விருஷபேந்திராவுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களை விற்கும் ஷோரூமிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த ஷோரூமுக்கு கடந்த 3 நாட்களாக மக்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அங்கு வைத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுதவிர 'புஷ்பா' திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும், காங்கிரஸ் பிரமுகரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். ஒட்டு மொத்தமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 40 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.