குஷால்நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியரை விரட்டிய காட்டுயானை
குஷால்நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியரை காட்டுயானை விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.;
குடகு-
குஷால்நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியரை காட்டுயானை விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் ரோந்து
குடகு மாவட்டம் குஷால்நகர் அருகே அமைந்துள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. அந்த யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் குஷால் நகர் அருகே ஆனேகோடு வனப்பகுதிக்கு உட்பட்ட கத்தேஹள்ளி-செட்டிஹள்ளி வழியில் கேருபானே பகுதியில் அமைந்திருக்கும் காபித்தோட்டங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதாவது வனத்துறை ஊழியர்கள் தனித்தனியாக பிரிந்து காபித்தோட்டங்களில் ரோந்து சென்றனர்.
கிராம மக்கள் பீதி
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு ஒரு காட்டுயானை வந்தது. அதை சற்றும் எதிர்பாராத வனத்துறையினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அந்த காட்டுயானை யோகேஷ் என்ற வனத்துறை ஊழியரை விரட்டிச்சென்றது. சிறிது தூரம் விரட்டிச்சென்ற நிலையில் பின்னர் காட்டுயானை அங்கிருந்து வேறு காபித்தோட்டத்திற்கு சென்றுவிட்டது. இதனால் யோகேசும், அவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இருப்பினும் காட்டுயானையிடம் இருந்து தப்பிக்க யோகேஷ் ஓடியபோது தவறி விழுந்து காயம் அடைந்திருந்தார். இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி சிவராம் விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராம மக்களும் பீதி அடைந்துள்ளனர்.