புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு; 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை -பிரதமர் நெகிழ்ச்சி

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இது 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Update: 2023-05-29 00:26 GMT

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வரலாற்றில் நேற்றைய நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் சிறப்பினைப் பெற்றது.

புதிய நாடாளுமன்றக்கட்டிடம்

ஜனநாயகத்தின் ஆன்மாவாகவும், திருக்கோவிலாகவும் போற்றப்படுகிற நாடாளுமன்றத்துக்கு உலகமே வியந்து பார்க்கிற வகையில் பிரமாண்டமான புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அது கோலாகல திறப்பு விழா கண்டிருக்கிறது.

இதுவரை பயன்பாட்டில் இருந்து வந்த நாடாளுமன்றக் கட்டிடம் ஏறத்தாழ 100 ஆண்டு காலம் பழமையானது. இட நெருக்கடியானது. இதன் காரணமாக எதிர்காலத்தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்றம் கட்டப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது.

அதற்கான பதில்தான், இப்போது ரூ.1,250 கோடியில் சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில், கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம். முக்கோண வடிவம் கொண்டுள்ள இந்தக் கட்டிடம், இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரம், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என அத்தனையும் சங்கமிக்கும் கம்பீர கட்டிடமாக அழகுடன் உருவெடுத்துள்ளது.

கோலாகலத்திறப்பு விழா

இந்தக் கட்டிடத்தின் கோலாகலத்திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவின் தொடக்கமாக நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடியும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதையடுத்து காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம், பவுத்தம் என அனைத்து மத பிரார்த்தனைகள் நடைபெற்றன. கணபதி ஹோமம் நடந்தது. வேதமந்திரங்கள் முழங்கின.

நாட்டுக்கு அர்ப்பணிப்பு

அவற்றைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன் அடையாளமாக அவர் அங்கே அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்களின் திரைகளை விலக்கினார்.

காலை 8.30 மணிக்கு மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சிமாற்றத்துக்கு அடையாளமாக பயன்படுத்தப்பட்ட செங்கோலை நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோல் நிறுவினார்

தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் தலைமையில் ஆதீனங்கள் 21 பேர் அணிவகுத்து வந்து பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கி, செங்கோலை அவரிடம் கொடுத்தனர். செங்கோலைப்பெற்று பிரதமர் மோடி வணங்கினார்.

ஒரு பக்கம் நாதஸ்வர இசையும், மற்றொரு பக்கம் வேதமந்திரங்களும் முழங்க செங்கோலை பிரதமர் மோடி ஊர்வலமாக எடுத்துச்சென்று, மக்களவையில் சபாநாயகர் இருக்கையின் வலது புறம் கண்ணாடிப்பெட்டியில் நிறுவி, தரையில் விழுந்து வணங்கினார்.

அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் குத்துவிளக்கேற்றினர். இந்த நிகழ்வின்போது, 'வந்தேமாதரம்' பாடல், நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது.

தொழிலாளர்கள் கவுரவிப்பு

அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு, டெல்லியின் அடையாளச்சின்னமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நனவாக்கிய தொழிலாளர்களைப் பிரதமர் மோடி கவுரவித்தார்.

அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த பிரதமர், பரிசுப்பொருட்களையும் வழங்கி சிறப்பு செய்தார்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

நண்பகல் 12 மணிக்கு விழாவின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் தொடங்கின. பிரதமர் மோடி வந்ததும் விழா நிகழ்ச்சிகள் தேசிய கீதத்துடன் தொடங்கின. 12.10 மணிக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரின் வாழ்த்துச்செய்திகளை வாசித்தார்.

அதைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் செங்கோல் பற்றிய 2 குறும்படங்கள் காட்டப்பட்டன. பின்னர் சபாநாயகர் ஓம்பிர்லா பேசினார்.

75 ரூபாய் நாணயம் வெளியீடு

அவர் பேசி முடித்ததும், புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை நினைவுகூரும் விதமாக 75 ரூபாய் நாணயம், அஞ்சல் தலை வெளியீடு நடந்தது. 75 ரூபாய் நாணயத்தையும், அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

75 ரூபாய் நாணயம் 35.35 கிராம் எடைகொண்டது. நாணயத்தின் ஒருபுறம் தேவநாகரி எழுத்தில் 'பாரத்' எனவும், ஆங்கிலத்தில் 'இந்தியா' என்ற வார்த்தையும், நடுவில் அசோக தூணின் 4 சிங்கங்களின் உருவமும் இடம்பெற்றுள்ளன. மற்றொரு புறம் நாடாளுமன்ற வளாகத்தின் தோற்றமும், நடப்பு ஆண்டைக் குறிக்கும் '2023'-ம் இடம்பெற்றிருக்கின்றன.

பிரதமர் மோடி பெருமிதம்

நாணயம், அஞ்சல் தலை வெளியீடு முடிந்ததும், பிரதமர் மோடி விழாவில் பேசினார். அவர், "இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை" என உருக்கமுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, " இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், இந்தியாவின் வளர்ச்சியுடன் உலகத்தின் வளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கும். இந்த நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை, இந்தியாவின் உறுதியை, இந்திய மக்களின் உற்சாக உணர்வை, மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது. இந்தியா முன்னோக்கி நடைபோடுகிறபோது, உலகமும் முன்னோக்கி நடை போடுகிறது" என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கலந்து கொண்ட பிரபலங்கள்

இந்த விழாவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிராத பா.ம.க., ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ், தெலுங்கு தேசம், சிரோமணி அகாலிதளம், பிஜூஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிதின்கட்காரி, எல்.முருகன் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், யோகி ஆதித்யநாத் (உ.பி.), ஹிமாந்த பிஸ்வ சர்மா (அசாம்), ஜெகன்மோகன் ரெட்டி(ஆந்திரா), ரெங்கசாமி (புதுச்சேரி) உள்ளிட்ட முதல்-மந்திரிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, 'தினத்தந்தி' குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினமலர் வெளியீட்டாளர் எல். ஆதிமூலம், எம்.பி.க்கள் அன்புமணி ராமதாஸ், ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்காக நாடாளுமன்ற வளாகப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்