திரிஷ்யம் பட பாணியில்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்த கணவன்
லுகேஷ் மற்றும் ராஜாராம் இருவரும் அந்த பெண்ணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை நிறைவேற்றுவதற்கு முன் இருவரும், திரிஷ்யம் படம் பார்த்திருக்கின்றனர்.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் கபீர்தம் மாவட்டத்தில் வசித்து வந்த 28 வயது பெண் திடீரென காணாமல் போனார். அவரை காணவில்லை என கல்யாண்பூர் கிராமத்தில் வசித்து வரும் அந்த பெண்ணின் தந்தை ராம்கிலாவன் சாஹு என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கூடுதல் எஸ்.பி. விகாஸ் குமார் தலைமையில் அந்த பெண்ணை தேடும் பணி நடந்தது. இந்நிலையில், தொழில்நுட்ப சான்றுகள், தொலைபேசி அழைப்பு பதிவு விவரங்கள் மற்றும் சந்தேக நபர்களிடம் நடந்த விசாரணை அடிப்படையில், 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் லுகேஷ் சாஹு (வயது 29) மற்றும் ராஜாராம் சாஹு (வயது 26) என தெரிய வந்தது. இதில், லுகேஷ் அந்த பெண்ணின் முன்னாள் கணவர் என தெரிய வந்தது. அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் 3 வருடங்களுக்கு முன் அவரை விட்டு, விட்டு லுகேஷ் சென்று விட்டார்.
கோர்ட்டு உத்தரவின்பேரில் 3 குழந்தைகளுக்காக அந்த பெண்ணுக்கு லுகேஷ் பராமரிப்பு தொகை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் கடனாளியாகி உள்ளார். அந்த பெண்ணுக்கு ராஜாராமுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.
எனினும், தொடர்ந்து பணம் கேட்டு வந்ததில் ராஜாராமுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. அவர் போலீசிடம் கூறும்போது, ரூ.1.5 லட்சம் வரை பணம் மற்றும் தன்னுடைய கடையில் இருந்த எலெக்ட்ரானிக் பொருட்களை கொடுத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
லுகேஷ் மற்றும் ராஜாராம் இருவரும் நன்கு அறிமுகம் ஆனவர்கள். அவர்கள் அந்த பெண்ணை விட்டு விலகி இருக்க விரும்பியுள்ளனர். இதனால், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனை நிறைவேற்றுவதற்கு முன் இருவரும், திரிஷ்யம் படம் பார்த்திருக்கின்றனர். பெண்ணின் உடலை மறைக்கவும், கைது நடவடிக்கையில் இருந்த தப்பிக்கவும் படத்தில் இருந்து சில விசயங்களை கற்று கொண்டனர்.
இதன்பின், பெண்ணை இருவரும் சேர்ந்து படுகொலை செய்து, வன பகுதியில் புதைத்து விட்டு சென்றனர். எனினும், போலீசாரின் விசாரணையில் அவர்கள் சிக்கி கொண்டனர்.