இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதி கைது; ரஷியா உடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்

இந்திய ஆளுங்கட்சி தலைவர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதியை ரஷியா உளவுப்படை கைது செய்தது.

Update: 2022-08-25 14:23 GMT

புதுடெல்லி,

ரஷிய நாட்டின் தேசிய பாதுகாப்பு முகமை கடந்த 22-ம் தேதி மாஸ்கோவில் ஐ.எஸ். பயங்கரவாதியை கைது செய்தது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

இந்திய ஆளுங்கட்சி தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், இதற்காக துருக்கியில் இருந்து ரஷியா வந்ததாகவும், பின்னர் ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அந்த பயங்கரவாதி தெரிவித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய மதக்கடவுளின் இறை தூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக இந்தியாவின் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் (நுபுர் சர்மா) மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ஐஎஸ் பயங்கரவாதி தெரிவித்துள்ளான். பயங்கரவாதிக்கு துருக்கியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என ரஷியா தெரிவித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ரஷிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த வழக்கு குறித்து நன்றாக அறிவோம். இந்த விவகாரத்தில் நாங்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் கூடுதல் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்