சித்தராமையா ஆட்சியில் உபசரிப்புக்கென ரூ.200 கோடி செலவு செய்து முறைகேடு

காபி, பிஸ்கட் வாங்கியதிலும் ஊழல் என்று சித்தராமையா ஆட்சியில் உபசரிப்புக்கென ரூ.200 கோடி செலவு செய்து முறைகேடு செய்திருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. பா.ஜனதா குற்றச்சாட்டு

Update: 2023-03-06 20:15 GMT

பெங்களூரு:-

பா.ஜனதா குற்றச்சாட்டு

பெங்களூரு தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் என்.ஆர்.ரமேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் சித்தராமையா ஆட்சியில் முதல்-மந்திரி கூட்டங்கள் மற்றும் பல்வேறு வேலைகள் தொடர்பாக முதல்-மந்திரியை சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு காபி, பிஸ்கட் போன்றவை கொடுத்து உபசரிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவு செய்துள்ளனர். இந்த தகவலை மாநில அரசே தெரிவித்துள்ளது.

இந்த தொகையின்படி ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.11 லட்சம் செலவு செய்துள்ளனர். இதில் 410 விடுமுறை நாட்கள் அடங்கும். இந்த விடுமுறை நாட்களை நீக்கிவிட்டு பார்த்தால் ஒரு நாளைக்கு ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளனர்.

இதில் 2013-14-ம் ஆண்டு ரூ.36.03 கோடியும், 2014-15-ம் ஆண்டு ரூ.38.26 கோடியும், 2015-16-ம் ஆண்டு ரூ.36.66 கோடியும், 2016-17-ம் ஆண்டு ரூ.44.73 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ.44.93 கோடியும் செலவு செய்துள்ளனர். இதில் போலி ஆவணங்களை தயாரித்து நம்ப முடியாத அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர்.

இதுகுறித்து கணக்கு தணிக்கை அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. காபி, பிஸ்கட் வாங்கியதிலும் கூட ஊழல் செய்துள்ள சித்தராமையா, தான் எந்த தவறும் செய்யாதவர் போல் பேசுகிறார்.

இவ்வாறு என்.ஆர்.ரமேஷ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்