மைசூரு அரண்மனையில் மன்னர் யதுவீர் தர்பார் நடத்தினார்

மைசூரு அரண்மனையில் மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார். மேலும் மலர் கண்காட்சி, திரைப்பட விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. இதனால் மைசூரு தசரா விழா களைகட்ட தொடங்கியுள்ளது.

Update: 2022-09-26 18:45 GMT

மைசூரு:

மைசூரு தசரா விழா

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். அதையடுத்து தொழில் துறை சார்பில் தொழில் தசரா மற்றும் கண்காட்சியை மானசகங்கோத்ரி வளாகத்தில் உள்ள விஞ்ஞான பவனில் வைத்து மந்திரி முருகேஷ் நிரானி தொடங்கி வைத்தார். திரைப்பட விழாவை பிரபல நடிகர் சிவராஜ்குமார் கலா மந்திராவில் தொடங்கி வைத்தார்.

மலர் கண்காட்சி பிரிவு, தோட்டக்கலை துறை ஆகியவை சார்பில் குப்பண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியை மந்திரி முனிரத்னா தொடங்கி வைத்தார்.

மின்விளக்கு அலங்காரம்

மைசூரு கலெக்டர் அலுவலகம் பின்புறம் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ள உணவு மேளாவை மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் தொடங்கி வைத்தார். மல்யுத்த போட்டி மைதானத்தில் மல்யுத்த போட்டியையும், தசரா கண்காட்சியையும் மந்திரி ஆனந்த்சிங் தொடங்கி வைத்தார். இதேபோல் யோகா தசரா, பாரத அமிர்த மகோத்சவம், மலர் கண்காட்சி, சிற்பக்கலை கண்காட்சி ஆகியவையும் தொடங்கின.

மாலை 6.30 மணியளவில் மின்விளக்கு அலங்காரம் போடப்பட்டது. இதனால் அரண்மனை உள்பட மைசூரு நகரமே மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. சையாஜி ரோட்டில் வைத்து மந்திரி சுனில்குமார் மின்விளக்கு அலங்காரத்தை தொடங்கி வைத்தார்.

இதற்கிடையே நேற்று காலையில் தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைத்ததும் அரண்மனையில் மன்னர் யதுவீர் தனியார் தர்பாரை நடத்தினார். அதாவது ஒவ்வொரு வருடமும் தசரா விழாவின்போது 10 நாட்களும் மைசூரு அரண்மனையில் மன்னர்கள் தனியார் தர்பார் நடத்துவது வழக்கம்.

எண்ணெய் ஸ்நானம்

அதுபோல் இந்த ஆண்டும் மைசூரு அரண்மனையில் மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ யதுவீர் உடையார் 10 நாட்களும் தனியார் தர்பார் நடத்துகிறார். நேற்று காலையில் அவர் அரண்மனை ராஜகுரு, மகாராணி பிரமோதா தேவி ஆகியோரிடம் ஆசி பெற்று, மஞ்சள், சீவக்காய் மற்றும் எண்ணெய் தேய்த்து அரண்மனை கலாசாரப்படி எண்ணெய் ஸ்நானம் செய்தார். பின்னர் அவருக்கு காப்பு கட்டப்பட்டது.

பின்னர் மன்னர் யதுவீர் அரண்மனையில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டார். காலை 6 மணியளவில் இருந்து கணபதி ஹோமம், சண்டி ஹோமம், சாமுண்டீஸ்வரி பூஜை உள்ளிட்டவை மகாராணி பிரமோதாதேவி, ராஜகுரு பரக்கலா மடத்தின் மடாதிபதி ஆகியோரால் நடத்தப்பட்டது.

தனியார் தர்பார்

அதையடுத்து பட்டத்து யானை அபிமன்யு மற்றும் பிற யானைகளுக்கும்,குதிரைகளுக்கும் பூஜை நடத்தப்பட்டது. இளவரசி திரிஷிகா குமாரியால், இளைய மன்னருக்கு பாத பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து சிம்மாசன பூஜையும் நடந்தது. பின்னர் மன்னர் யதுவீர் ராஜ உடை அணிந்தார். அதையடுத்து அவர் ராஜ உடையில் கம்பீர நடைபோட்டு தனியார் தர்பார் நடக்கும் இடத்துக்கு வந்தார். அப்போது அங்கிருந்த சேவகர்கள் மன்னர் வரார் என்று கம்பீர குரலுடன் கோஷம் எழுப்பினர்.

சரியாக மதியம் 12.30 மணியளவில் தங்க, வைர, நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் மன்னர் யதுவீர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தினார். அவர் அரை மணி நேரம் தனியார் தர்பார் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்ப்பத்தில் ராஜ குருக்கள், மகாராணி பிரமோதா தேவி, குட்டி இளவரசர் ஆத்யவீர் ஸ்ரீகண்டதத்த சாமராஜ உடையார், இளவரசி திரிஷிகா குமாரி மற்றும் மன்னர் குடும்பத்தினர், அரண்மனை ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதையடுத்து இதர பூஜைகள் அனைத்தும் அரண்மனை கலாசாரப்படி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்