கடந்த நிதியாண்டில், ரெயில்நிலையங்களில் கடத்தல்காரர்களிடம் இருந்து 604 பேர் மீட்பு
கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் 604 பேரை ரெயில்வே பாதுகாப்புப்படை மீட்டுள்ளது.;
புதுடெல்லி,
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ரெயில்வே பாதுகாப்புப் படை உறுதிபூண்டுள்ளது. இதற்காக ரெயில் பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட இடங்களில் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் 604 பேரை ரெயில்வே பாதுகாப்புப்படை மீட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்த 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் இணைவதற்கு முக்கியப்பங்கு வகித்துள்ளது.
'ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா' இயக்கம் மூலம் கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் ரெயில், நடைமேடைகள் மற்றும் ரெயில்பாதைகளில் 873 ஆண்கள் மற்றும் 543 பெண்கள் பாதுகாப்புப்படையினரால் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர். 'ஆபரேஷன் அமநாத்' மூலம் 32,337 பயணிகளுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான உடைமைகள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
220 பெண்களுக்கு ரெயில் பயணத்தில் மகப்பேறு நிகழ்ந்துள்ளது. மகளிர் பாதுகாப்புக்காக 864 ரெயில்நிலையங்களில், 6,646 ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் ரூ.81 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மேற்கண்ட தகவல்களை ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.