ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. மேல்முறையீடு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-07-19 01:32 GMT

புதுடெல்லி,

கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதன் விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 5-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தா விசாரித்து, சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்து கடந்த 2021 நவம்பர் 21-ந் தேதி தீர்ப்பு கூறினார்.

அதற்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

சி.பி.ஐ. சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, வழக்கில் அனைத்து ஆவணங்களையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது, அது விசாரணையை பாதிக்கும் என வாதிட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்