ஈத்கா மைதான விஷயத்தில் முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
ஈத்கா மைதான விஷயத்தில் முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:
ஈத்கா மைதானம்
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் ஈத்கா மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் முஸ்லிம்கள், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது தொழுகை நடத்துவார்கள். இந்த நிலையில் அந்த மைதானத்தில் இந்து பண்டிகைகள் மற்றும் விழாக்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. வக்பு வாரியம், அந்த மைதானம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று கூறியது. அதை பெங்களூரு மாநகராட்சி நிராகரித்தது. அந்த மைதானம் மாநில அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று கூறியது.
பெங்களூரு மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது ஐகோர்ட்டில் நேற்று நீதிபதி ஹேமந்த் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, ஈத்கா மைதானத்தில் முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதாவது முஸ்லிம்கள் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகையின்போது மட்டும் அங்கு தொழுகை நடத்தலாம் என்றும், அந்த மைதானத்தை விளையாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இதை தவிர வேறு நோக்கங்களுக்கு அதை பயன்படுத்த கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பர் மாதம் 23-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அனுமதி கிடைக்காது
அந்த மைதானத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையை வைத்து வழிபட இந்து அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன. ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் அங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.