சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்.

Update: 2023-07-17 18:45 GMT

மங்களூரு-

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்.

பாலியல் பலாத்காரம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள அடையாறு மசூதி தெருவை சேர்ந்தவர் ஹைசன்(வயது35). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு லேடிஹில் பகுதியில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை தூக்கி சென்று அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஹைசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை அவர் மிரட்டி உள்ளார். இதனால் சிறுமி இதைப்பற்றி யாரிடமும் கூறவில்லை. மேலும் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாள். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளாள்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உருவா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹைசனை கைது செய்தனர். இதையடுத்து அவரை மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஹைசன் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து அவர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தலைமறைவானார்.

சிறையில் அடைத்தனர்

இந்தநிலையில் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. ஹைசனை உருவா போலீசார் தேடி வந்தனர். மேலும் அவரை பிடிப்பதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், மங்களூரு பகுதியில் நேற்றுமுன்தினம் ஹைசன் பதுங்கி இருப்பதாக உருவா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஹைசனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் ஹைசன் தற்போது கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்