பதுங்கு குழியில்... பேனாவுக்கு பதில் துப்பாக்கியுடன் ஆசிரியர்; மணிப்பூர் நிலவரம்

மணிப்பூரில் தொடரும் வன்முறையால், பதுங்கு குழியில் பேனாவுக்கு பதில் கையில் துப்பாக்கியுடன் ஆசிரியர், மாணவர்கள் உள்ளனர்.

Update: 2023-06-21 06:03 GMT

இம்பால்,

மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை பழங்குடியின பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. எனினும் இதற்கு குகி பழங்குடி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க கோரி மே மாத தொடக்கத்தில் மெய்தெய் பிரிவினர் பேரணியாக சென்றனர். இதற்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது.

இதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன.

இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை பரவியது. கடந்த மே மாத இறுதியில், ஒரு காவல் உயரதிகாரி உள்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரின் வீடு சூறையாடப்பட்டது. ரைபிள் படை பிரிவின் ஆயுத கிடங்கில் இருந்து ஆயிரம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டும் இருந்தன.

இந்த ஆயுதங்களை வைத்திருக்கும் அனைவரும் அவற்றை திருப்பி ஒப்படைக்கும்படி பாதுகாப்பு படையினர் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர். மத்திய மந்திரி அமித்ஷாவின் உத்தரவின்படி, மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திர தன்மை திரும்புவதற்காக இவற்றை விரைவில் ஒப்படைக்க கேட்டு கொள்ளப்பட்டது.

இந்த் நிலையில், கடந்த 13-ந்தேதி காமன்லோக் பகுதியில் நடந்த வன்முறையில் கிராம மக்கள் 11 பேர் கொல்லப்பட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் பரவிய நிலையில், மக்கள் அமைதி காக்கும்படி முதல்-மந்திரி பைரன் சிங் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், குகி பழங்குடியினரை இந்திய ராணுவம் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது.

ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது. இது முற்றிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் என்று தெரிவித்ததுடன், இந்த வழக்கு வருகிற ஜூலை 3-ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தது.

எனினும், இதுபற்றி மத்திய அரசு கோர்ட்டில் கூறும்போது, மணிப்பூரில் பாதுகாப்பு முகமைகள் களமிறக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணியை சிறந்த முறையில் செய்து வருகின்றன என்று தெரிவித்தது.

மணிப்பூரில் நம்பிக்கையற்ற சூழல் மற்றும் தொடரும் வன்முறை ஆகியவற்றால் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இரு பிரிவினரும் எப்போதும் மோதி கொள்ளும் நிலை காணப்படுகிறது. பொதுமக்களும் அச்சமுடனேயே இருக்கின்றனர். இதனால், மணிப்பூரில் தொடரும் வன்முறையால், பதுங்கு குழியில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பதுங்கி கொண்டனர்.

ஆசிரியர் ஒருவர் பேனாவுக்கு பதில் கையில் துப்பாக்கியை எடுத்து உள்ளார். அரசு தேர்வுக்கு தயாராகி வரும் ஒரு மாணவர் கையில் ஆயுதமுடன் காணப்படுகிறார். அவர் பதுங்கு குழியிலேயே அதிக நேரம் செலவிட்டு வருகிறார். கிராமங்களில் ஆயுதங்கள் ஏந்திய தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் பலரும் கலவரத்திற்கு முன்பு வேலைக்கு சென்று வந்தவர்கள். பலர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வந்தவர்கள் ஆவர். வன்முறை தொடர்ந்து பரவி வரும் சூழலில், வீடுகள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்க கிராமங்களே தன்னார்வல குழுக்களை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

45 நாட்களுக்கு மேலாகியும், வன்முறையான சூழல் காணப்படும் நிலையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 2 ஆயிரம் வீடுகள் மற்றும் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டும் மற்றும் 50 ஆயிரம் பேர் வரை புலம்பெயர்ந்தும் உள்ளனர்.

ராணுவம், அசாம் ரைபிள் படையினர், மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் மணிப்பூர் போலீசார் குவிக்கப்பட்டபோதும் மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, இயல்பு நிலையை திரும்ப செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்