தரிகெரேவில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

தரிகெரே அருகே ஊருக்குள் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.;

Update:2023-08-23 00:15 IST

சிக்கமகளூரு-

தரிகெரே அருகே ஊருக்குள் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவில் அடிக்கடி சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இதனால் பீதியடைந்துள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் தரிகெரே டவுன் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் வைத்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தரிகெரேவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுத்தை உலா வந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை ஒன்று வந்து சென்ற காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. இதை அறிந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளை சுற்றி வளைத்து சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதற்காக தரிகெரே பகுதியில் கூண்டுகள் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்