சிவமொக்காவில்கத்தியால் குத்தி வாலிபர் கொலை

சிகாரிபுரா அருகே மிலாடி நபி கொண்டாடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருவதால் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.;

Update:2023-08-23 00:15 IST

சிவமொக்கா

சிகாரிபுரா அருகே மிலாடி நபி கொண்டாடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருவதால் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மிலாடி நபி

சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவை அடுத்த கே.எச்.பி. லே அவுட் பகுதியில் ஆண்டு தோறும் மிலாடி நபி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு மிலாடி நபி விழா வருகிற 28-ந் தேதி கொண்டாட அந்த பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.

பின்னர் சில காரணத்தினால் ஆலோசனை கூட்டம் தள்ளிப்போனது. அதன்படி நேற்று முன்தினம் இரவு இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கே.எச்.பி. லே அவுட்டை சேர்ந்த ஜாபர் சாப் (வயது 32) என்பவர் விழா குறித்து கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது மற்றொரு தரப்பினருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஜாபரிடம் அவர்கள் தகராறு செய்தனர்.

வாலிபர் கொலை

இந்த தகராறு இரு தரப்பினரிடையே மோதலாக மாறியது. ஒருவர் மாறி ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது கோபமடைந்த எதிர்தரப்பினர் கத்தியால் ஜாபரை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஜாபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றபோலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிகாரிபுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அணில் குமார் பூமா ரெட்டி விசாரணை நடத்தினார். விசாரணையில் மிலாடி நபியை கொண்டாடுவது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில் கொலை நடந்திருப்பதாக தெரியவந்தது.

போலீசார் குவிப்பு


இதுகுறித்து சிகாரிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் ஜாபர் கொலையால் கே.எச்.பி. லே அவுட் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்