சிவமொக்கா மாவட்டத்தில் புதிதாக 14 ஆயிரம் வாக்காளர்கள் சேர்ப்பு

சிவமொக்கா மாவட்டத்தில் புதிதாக 14 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் செல்வமணி கூறினார்.

Update: 2023-04-30 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டத்தில் புதிதாக 14 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் செல்வமணி கூறினார்.

புதிய வாக்காளர் பட்டியல்

கர்நாடக மாநில சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதிய வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதுபோல் சிவமொக்கா மாவட்ட புதிய வாக்காளர் பட்டியலும் நேற்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலை மாவட்ட கலெக்டர் செல்வமணி வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் புதிதாக 14 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 72 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 28 ஆயிரத்து 886 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 43 ஆயிரத்து 713 பேர் ஆவர். 3-ம் பாலினத்தவர் 32 பேர் இருக்கிறார்கள். இதில் 80 வயதை கடந்த வாக்காளர்கள் 24 ஆயிரத்து 95 பேர் ஆவர்.

வீட்டில் இருந்தே ஓட்டுப்போட...

மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவமொக்கா நகர தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 704 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி தீர்த்தஹள்ளி ஆகும். அங்கு 1 லட்சத்து 88 ஆயிரத்து 146 வாக்காளர்கள் இருக்கிறார்கள். மாவட்டத்தில் மொத்தம் 1,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் அதிகபட்சமாக சிவமொக்கா நகர தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக சிகாரிப்புரா தொகுதியில் 234 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட இருக்கின்றன.

80 வயதை கடந்த 1,874 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் 490 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 364 பேர் இந்த முறை வீட்டில் இருந்தே ஓட்டு போடுகிறார்கள். இதுதவிர கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் கொரோனா நோயாளிகள் யாரும் வீட்டில் இருந்தே வாக்களிக்க முன்பதிவு செய்யவில்லை.

இவ்வாறு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான செல்வமணி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்