உப்பள்ளியில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.39 லட்சம் மோசடி
உப்பள்ளியில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.39 லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
உப்பள்ளி-
உப்பள்ளியில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.39 லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
வங்கியில் இருந்து பேசுவதாக
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் சிவமூர்த்தி. குயின்ஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் செல்போன் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். பின்னர் அவர் தங்களது நிறுவன விவரங்களை தெரிவிக்கும்படி சிவமூர்த்தியிடம் கூறியுள்ளார். அதன்படி சிவமூர்த்தி நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளையும் மர்மநபரிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 29 லட்சம் எடுக்கப்பட்டதாக சிவமூர்த்திக்கு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அவர் மர்மநபரை தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ரூ. 30 லட்சம் மோசடி
இதேபோல் உப்பள்ளி தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருபவர் சந்துரு. இவரது எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை பார்ப்பதன் மூலம் ரூ.500 முதல் 20 ஆயிரம் வரை அதிகளவில் சம்பாதிக்கலாம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஒரு லிங்க் இருந்தது. அதில் தங்களின் பணியை மேற்கொள்ள தேவையான விவரங்களை பெற்றுக்கொண்டதுடன் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால் பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதில் சந்துரு தனது விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.8½ லட்சம் எடுப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதேப்போல் கேஷ்வாப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுதா என்பவரிடமும் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என கூறி ரூ. 1.47 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இந்த 3 சம்பவங்கள் குறித்து உப்பள்ளி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.