திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை
மத்திய மந்திரி சபை பதவியேற்பதற்கு முன்னர், அதில் இடம்பெற உள்ளவர்களை சந்தித்து பேசுவதை 2014- முதல் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.;
புதுடெல்லி,
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு இன்று இரவு 7:15 மணிக்கு பதவியேற்கிறது. புதிய அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி, தனது வீட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
இதில், அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், மனோகர்லால் கட்டார், எல்.முருகன், குமாரசாமி, தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், சிராக் பஸ்வான், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேநீர் விருந்தில் பங்கேற்றவர்கள் மத்திய மந்திரிகளாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவரும் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். மந்திரியாக பதவியேற்றதும் துறை ரீதியிலான பணிகளில் கவனம் செலுத்தி, முதல் 100 நாளில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை அமல்படுத்துங்கள்" இவ்வாறு மோடி பேசினார்.
மத்திய மந்திரி சபை பதவியேற்பதற்கு முன்னர், அதில் இடம்பெற உள்ளவர்களை சந்தித்து பேசுவதை 2014- முதல் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். எனவே, இன்றைய தேநீர் விருந்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.