மைசூருவில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல ஒரே டிக்கெட் கலெக்டர் பகாதி கவுதம் தகவல்
மைசூருவில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல ஒரே டிக்கெட்டை பயன்படுத்தலாம் என்று கலெக்டர் பகாதி கவுதம் தெரிவித்துள்ளார்.
மைசூரு:
மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பகாதி கவுதம் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்து கலெக்டர் பகாதி கவுதம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மைசூருவில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பயணிகள் சுற்றுலாத்தலங்களில் டிக்கெட் வாங்குவதற்காகவே நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டி உள்ளது. இதை தவிர்த்து சுற்றுலா பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் ஒரே டிக்கெட் வசதியை அமல்படுத்தப்படுகிறது.
தசரா சமயத்தில் இந்த திட்டத்தை கொண்டு வந்து வெற்றி அடைந்தால் நிரந்தரமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்திற்கான சோதனை தசரா விழா தொடக்க நாளான வருகிற 26-ந்தேதி முதல் தொடங்கி அக்டோபர் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.