மங்களூருவில் தொடர் சங்கிலி பறிப்பு; 2 பேர் கைது
மங்களூருவில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மங்களூரு-
மங்களூரு அருகே தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.14 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சங்கிலி பறிப்பு வழக்கு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் சங்கிலி பறிப்பு சம்பவம் அதிகரித்தன. இதனால் போலீசார் இந்த சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும்படி நகர போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போலீசார் தனிப்படை அமைத்து சங்கிலி பறிப்பு திருடர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சூரத்கல் போலீசார் நகரப்பகுதியில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த நகைகளை பார்வைக்காக மங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நகைகளை நகர போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் நேரில் சென்று பார்வையிட்டார்.
2 பேர் கைது
அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறியதாவது:-
மங்களூரு சூரத்கல் பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு வழக்கு தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஹபீப் ஹாசன், உல்லாலைச் சேர்ந்த முகமது பைசல் என்று தெரியவந்தது. இவர்களில் ஹபீப் ஹாசன் மீது உடுப்பி, தட்சிண கன்னடா, மங்களூரு உள்பட பல போலீஸ் நிலையங்களில் 35 வழக்குகளும், முகமது பைசல் மீது 15 வழக்குகளும் பதிவாகியுள்ளது. சூரத்கல் போலீஸ் நிலையத்தில் மட்டும் 2 பேர் மீது 12 வழக்குகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. அதில் 8 சங்கலி பறிப்பு, 4 மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிள்களில், சுற்றி திரிந்து, மூதாட்டிகளை குறி வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
14 லட்சம் நகைகள் பறிமுதல்
இது தொடர்பாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க நகைகள், 4 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டள்ளது. இந்த சங்கிலி பறிப்பில் திருடர்களை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு ரூ.8 ஆயிரம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல போலீசார் தொடர்ந்து பணியாற்றவேண்டும். சங்கிலி பறிப்பு, திருட்டு செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.