மண்டியா மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் மாநில நிர்வாக சீர்திருத்த ஆணைய குழு ஆய்வு

மண்டியா மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மாநில நிர்வாக சீர்திருத்த ஆணைய குழுவினர் வருகிற 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 3 நாட்கள் ஆய்வு செய்ய இருப்பதாக மாவட்ட கலெக்டர்

Update: 2023-05-19 18:45 GMT

மண்டியா-

மண்டியா மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மாநில நிர்வாக சீர்திருத்த ஆணைய குழுவினர் வருகிற 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 3 நாட்கள் ஆய்வு செய்ய இருப்பதாக மாவட்ட கலெக்டர் கூறினார்.

நிர்வாக சீர்திருத்த ஆணைய குழுவினர்

மண்டியா மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மாநில நிர்வாக சீர்திருத்த ஆணைய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். இதுபற்றி மண்டியா மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணா நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மண்டியா மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மாநில நிர்வாக சீர்திருத்த ஆணைய குழுவினர் ஆய்வு மேற்கொள்கிறார்கள். இந்த குழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விஜய் பாஸ்கர், பிரசன்னகுமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. இந்த குழுவினர் நாளை மறுநாள்(22-ந் தேதி) முதல் 24-ந் தேதி வரை ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

கோரிக்கைகள்

அதிகாரிகள் குழுவினர் வந்து கேட்கும்போது அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் கூற வேண்டும். யாருக்கும் தொந்தரவு கொடுக்காதபடி அரசு பணியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு மூலம் அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள், வசதிகள், அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கான வசதிகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.

வருகிற 22-ந் தேதி மதியம் 1.40 மணியளவில் காவிரி நீர்ப்பாசன அலுவலகத்தில் மாநில நிர்வாக சீர்திருத்த குழுவினர் சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு கிராமப்புறங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்று தங்களின் நிலை மற்றும் கோரிக்கைகளை எடுத்துக் கூறலாம்.

வீட்டு வசதி திட்டங்கள்

அதன்பிறகு பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்திவிட்டு வருகிற 24-ந் தேதி அவர்கள் மண்டியா மாவட்ட அலுவலக வளாகத்தில் சிறப்பு கூட்டத்தை நடத்துகிறார்கள். காலை 10 மணிக்கு வருவாய் துறை, 11 மணிக்கு புள்ளியல் துறை, 12 மணிக்கு குடிசைப்பகுதி மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். அதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள வீட்டு வசதி திட்டங்களின் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டு வீடுகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கலெக்டர் கோபாலகிருஷ்ணாவுடன் மாவட்ட கூடுதல் கலெக்டர் நாகராஜு, தாசில்தார் சவுமியா உள்பட பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்