மண்டியா மாவட்டத்தில் தேர்தலில் தோல்வியை தழுவிய 4 முதல்-மந்திரி வேட்பாளர்கள்
மண்டியா மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் 4 முதல்-மந்திரி வேட்பாளர்கள் தோல்வியை தழுவி உள்ளனர்.
பெங்களூரு-
ஒவ்வொரு சட்டசபை தேர்தல்களின் போதும் சில கட்சிகள் தங்களின் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்தித்து வருகின்றன. கர்நாடகத்தில் விரைவில்சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் குமாரசாமியும் முதல்-மந்திரி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு முதல்-மந்திரி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ள வரலாறு கர்நாடகத்தில் உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.வி.சங்கர கவுடா, மண்டியா மாவட்டம் கெரேகோடு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சவுடய்யா என்பவரிடம் 5,517 வாக்குகள் வித்தியாசத்தில் கே.வி.சங்கர கவுடா தோல்வி அடைந்தார். இதன்மூலம் அத்தொகுதியில் சவுடய்யா 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தார்.
1989-ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் மத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபாநாயகர் மற்றும் துணை முதல்-மந்திரியாக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, 1994-ம் ஆண்டு தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர் மத்தூர் தொகுதியில் களம் இறங்கினார். அப்போது, எஸ்.எம்.கிருஷ்ணாவை, ஜனதாதளம் கட்சி வேட்பாளர் மகேஷ் சந்த் 3,646 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். பின்னர், மீண்டும் 1999-ம் ஆண்டு மத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய எஸ்.எம்.கிருஷ்ணா, மகேஷ் சந்தை 29 ஆயிரத்து 459 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்-மந்திரி ஆனார். பின்னர், 2004-ம் ஆண்டு தேர்தலில் மத்தூரில் தோல்வி பயம் அடைந்த எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கே.வி.சங்கரகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை தவிர தாங்கள் சார்ந்த கட்சிகளில் இருந்து முதல்-மந்திரி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சாகுகார் பன்னய்யா, எச்.கே.வீரண்ணா கவுடா ஆகியோரும் சட்டசபை தேர்தல்களில் மண்டியா மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்து உள்ளனர்.